திருப்புகழின் 101வது பாடலான "விறல்மாரன் ஐந்து" பாடலுக்கு இறைவன் அருளால் பதிவிடப்படும் விளக்க உரை!
சிவாய நம சாய்ராம்,
இறைவனருளால் திருப்புகழின் 101 வது பாடலான "விறல்மாரன் ஐந்து" என்கின்ற பாடலுக்கு குருவான சீரடி சாய் அவர்களின் திருவடி வணங்கி, அருணகிரிநாதரின் திருவடி வணங்கி, இறைவன் உணர்த்திய பாடலின் பொருள் இங்கு பகிரப்படுகிறது.
இந்தப் பாடல் பாடும் பொழுது அருணகிரிநாத பெருமான், தன்னுடைய குறைகளை உணர்ந்து, அந்தக் குறைகள் நீங்குவதற்கு இறைவன் அருள் வேண்டும் என்பதை உணர்ந்து, காமத்தால் தான் படும் அவல நிலையை இறைவனிடம் மனம் நொந்து உருகி, இந்த அவல நிலை தீர நீ உன் கடைக்கண் காட்டி அருள் புரிய மாட்டாயா? என்று உருகிப் பாடும் பாடல்.
நாம் ஒவ்வொருவருமே பல்வேறு விதமான குறைகள், மன அழுக்குகள் உடையவர்கள். அதை நாம் உணர்ந்து இறைவனிடம் இந்தப் பாடலை பாடி வேண்டும் பொழுது, நமக்கும் ஞானத்தை, அவரை உணரும் பக்குவத்தை கொடுத்து நம் மனதிற்கு அமைதியை, ஆனந்தத்தை கொடுக்கும் அற்புதமான ஒரு பாடல்.
அருணகிரிநாத பெருமாள் பாடல்களை படித்து உணரும் பொழுது ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்திரம் ஞாபகத்திற்கு வருகிறது. அருணகிரிநாதப் பெருமான் பாடல்களை முழுவதுமாக புரிந்து கொள்ளுதல் எல்லோருக்கும் இயலாது. ஆனால் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்திரம் படிக்கும் பொழுது, அந்த நூலை எழுதியவர் உட்பட அதில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் பல்வேறு விதமான தவறுகளை தங்கள் வாழும் பொழுது செய்திருப்பார்கள். அந்த தவறுகள் மன்னிக்கப்பட்டு, இறைவன் குருவாக வந்து எப்படி அவர்களை ஆட்கொள்கிறான் என்று மிக அழகாக ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்திரம் படிக்கும் பொழுது, இறைவன் ஒரு கோடி அன்னைகளை சேர்த்தால் எவ்வளவு அன்பு கிடைக்குமோ அத்தனை அன்பு மிக்கவர், கருணை மிக்கவர் என்பதை புரிந்து கொள்ள முடியும். இறைவன் எவ்வளவு அன்பு மிக்கவர் என்பதை உணர்த்தும் விஷயமாகவே அருணகிரிநாதர் பெருமானின் ஒவ்வொரு பாடலும் அமைகிறது.
காமம் என்னும் சுழலில் எப்படி மாட்டி தவிக்கிறார் என்பதை அருணகிரிநாத பெருமானின் ஒவ்வொரு பாடலும் உணர்த்துகிறது. அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்கின்ற ஆழமான உணர்வும் தவிப்பும் தான் இறைவனை ஈர்த்து இருக்கிறது.
இந்தப் பாடலை படிக்கும் பொழுது, நாம் ஒவ்வொருவருமே நம்முடைய குறைகளை எண்ணி பயப்படாமல், “இதிலிருந்து என்னை காப்பாற்று இறைவா” என்று அவருடைய திருவடியில் உள்ளம் உருகி தவித்து வேண்டும் பொழுது, கண்டிப்பாக அவருடைய அருள் கிடைக்கும் என்பதை உணர்த்தும் மிக அற்புதமான பாடல்.
தன்னுடைய உள்ளத் தவிப்பை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தி, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் இறைவனை அணுக முடியும் என்று உணர்த்திய அற்புதமான ஞானி அருணகிரிநாதப் பெருமான்.
அருணகிரிநாத பெருமானின் திருவடிகளையும், இறைவனின் திருவடிகளையும் பணிந்து வீழ்ந்து வணங்கி,
நம் குறை தீரவும்,
ஆன்மாவில் இறைவனை உணரவும்
இறைவன் திருவடியில் மன்றாடுவோம்.
சிவாய நம ஓம் சாய் ராம்
திருப்புகழின் 101வது பாடலான "விறல்மாரன் ஐந்து" பாடலுக்கு இறைவன் அருளுடன் பதிவிடப்படும் விளக்க உரை:
விறல்மாரன்... சக்தி வாய்ந்த மன்மதன்
ஐந்து மலர்வாளி சிந்த...
காமத்தை தூண்டும் வண்ணம் ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,
வானி லிந்து மிக வெயில் காய ...
ஆகாயத்தில் நிலவு மிகுந்த பிரகாசத்துடன் ஒளிர
மிதவாடை வந்து .தழல்போல வொன்ற ...
இந்த சமயத்தில் மிதமான குளிருடன் வீசும் காற்று காமத் தீயை அதிகரிக்க
வினைமாதர் தந்தம் வசைகூற ...
தொழில் செய்யும் மாதர்கள் தங்களிடம் உள்ள பெண்களின் அழகைப் பற்றி கூற
குறவாணர் குன்றி லுறை ...
மலைக் குறவர்களின் மலையில் உறைபவனே
பேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர ...
அறிவை இழக்க வைக்கும் இந்த அறிவிலியின் காமத்தின் துன்ப மயக்கம் தீர
குளிர்மாலை யின்க ண் ...
இந்த குளிர்ந்த மாலைப் பொழுதில் உன் கடை கண்ணால் அருள் புரிய
அணிமாலை தந்து ...
அன்புடன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து
குறைதீர வந்து குறுகாயோ ...
என்னுடைய அவலமான நிலை தீர என்னை அணுகமாட்டாயா?
மறிமா னுகந்த இறையோன் ... இளம்மானை ஏந்தி இருக்கும் இறைவனான சிவன்
மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ...
உன் உபதேசம் பெற்று மகிழ்ந்து உன்னை வணங்கும்
அளவிற்கு அறிவை உடைய பெருமை மிகுந்தவனே
மலைமாவு சிந்த ...
கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) பிளவுபட
அலைவேலை யஞ்ச ...
அலைகடல் அஞ்சவும்
வடிவே லெறிந்த அதிதீரா ...
உன் சக்தி வாய்ந்த வேலை வீசிய அதி தீரனே,
அறிவால் அறிந்து ...
ஞானத்தால்/உணர்வால்/ஆன்மாவால் உன்னை உணர்ந்து,
உன்னிருதாள் இறைஞ்சும் ...
உனது இரு தாள்களையும் பணிந்து வீழ்ந்து வணங்கும்
அடியார் இடைஞ்சல் களைவோனே ...
அடியார்களின் துயரைக் களைபவனே,
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ...
அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே ...
அலையடிக்கும் கடலின் கரையில் இருக்கும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமானே
சிவாய நம ஓம் சாய் ராம்
Comments
Post a Comment