சீரடி சாய்நாதர் அருளால் உணர்த்தப்பட்ட எளிய சிவபுராண விளக்கம்!
சிவாய நம ஓம் சாய் ராம்,
குருவின் அருளால் உணர்த்தப்பட்ட
எளிய சிவபுராண விளக்கம், குருவின் திருவடியில்
அன்புடன் நன்றியுடன் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
திருவாசகம் குறித்து ஒரு அதிசயமான உண்மையைப் பார்ப்போம்.
திருவாசகத்தை மாணிக்கவாசகப் பெருமான் பாடியிருந்தாலும்,
அது மாணிக்கவாசகப் பெருமான் பாடியது என மட்டும் அமையாமல்,
யார் பாடினாலும், யார் படித்தாலும், அவர்கள் அனைவரும்
இறைவனைப் போற்றிப் பாடுவதாகவே திருவாசகம் அமைந்துள்ளது.
இதுவே திருவாசகத்தின் தனிப்பட்ட சிறப்பு.
இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு,
சிவபுராணத்தில் வரும் “வாழ்க, வெல்க, போற்றி”
என்ற வார்த்தைகளிலேயே உள்ளது.
ஏன் என்றால்—
அவன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்தவன்.
ஆண்பாலும், பெண்பாலும், பலர்பாலும், அஃறிணைப் பாலாலும்
எல்லாப் பால்களிலும் அமையக் கூடியவன் என்பதை
இலக்கண ரீதியாக உணர்த்தும் விதத்தில்
வாழ்க, வெல்க, போற்றி என்ற சொற்கள் அமைந்துள்ளன.
எடுத்துக்காட்டாக:
அவன் வாழ்க,
அவள் வாழ்க,
அவர்கள் வாழ்க,
அது வாழ்க,
நாம் வாழ்க,
நாடு வாழ்க —
என்று எல்லாவற்றிக்கும் பொருந்தும்.
இதனால்தான்
மாணிக்கவாசகர் “வாழ்க, வெல்க” எனப் பாடினாலும்,
“போற்றுக” என்று பாடவில்லை.
ஏன் பாடவில்லை?
“போற்றுக” எனப் பாடியிருந்தால்,
அது இறைவனைப் போற்ற ஒருவருக்குக் கட்டளை இடுவது போல அமையும்.
அதைப் பாடுபவர்கள்
தாமே இறைவனைப் போற்றுவதாக அமையாது.
ஆனால்
“போற்றி” எனப் பாடியதால்
இந்தப் பாடலைப் பாடும் ஒவ்வொருவரும்
உள்ளத்திலிருந்து இறைவனைப் போற்றும் வகையில்
அமைகிறது.
திருவாசகம் முழுவதும் இந்த உணர்விலேயே அமைந்துள்ளது:
படிக்கும் ஒவ்வொருவரும் இறைவனை நேரடியாகப் போற்ற வேண்டும்
என்பதே நோக்கம்.
மற்ற தேவாரப் பாடல்களில்
“ஞானம் சம்பந்தன் சொன்ன”
என்று பாடியவர் பெயர் வரும்..
மாணிக்கவாசகர்“நாயேன்” என்றே சொல்லி இருக்கிறார்
ஏனென்றால், பாடும் ஒவ்வொருவரும்
இறைவன் திருவடியை பணிந்து போற்றும் வண்ணம்
திருவாசகம் அமைந்துள்ளது. நாம் ஒவ்வொருவரும்
இறைவனைப் போற்றும் வண்ணம், உள்ளம்
உருகும் வண்ணம் திருவாசகத்தை நமக்கு
கொடுத்துவிட்டு சென்று இருக்கும் மாணிக்கவாசகர் பெருமான்
திருவடியை அன்புடன் நன்றியுடன் பணிந்து வணங்குவோம் !
திருவாசகத்தில் முதல் பதினைந்து வரிகள்
இறைவனின் திருவடியை போற்றி, புகழ்ந்து பாடுகின்றன.
திருக்குறளில் “கடவுள் வாழ்த்து” அதிகாரத்தில்
கிட்டத்தட்ட ஏழு குறள்கள்
இறைவனின் திருவடியை போற்றி விளக்குகின்றன.
வள்ளலார் அவர்களின் சுத்த சிவநிலை பாடலில்:
“இம்மையிலே மாமாயை நீங்கினள்
பொன் வண்ண அடி உற்றது என்றும்
சாமாறிலை எனக்குத் தான்”
என்று பாடியிருக்கிறார்.
இங்கு சாமாறிலை என்றால்
இனி மரணம் இல்லை என்ற பொருள்.
ஏன் என்றால் —
பிறவிச் சுழற்சி நிறுத்தப்பட்டால்
பிறப்பு இல்லை;
பிறப்பு இல்லையென்றால்
இறப்பும் இல்லை.
சிவசக்தியின் அம்சமாகிய அனுமான்
எப்பொழுதும் ராமரின் திருவடியில் இருப்பது
இந்த உண்மையையே நினைவுறுத்துகிறது.
இவை அனைத்தும் எதை உணர்த்துகின்றன என்றால் —
பணிவு இருந்தாலே இறைவனை அடைய முடியும்.
“நான்” என்ற அகங்காரம் இருக்கும் இடத்தில்
பணிவு இருக்காது.
அனுமன் குரங்கு உருவில் இருப்பதற்கான பொருள் என்ன?
ஏனெனில் நம்முடைய மனமும் குரங்கு போலவே
எப்பொழுதும் அலைந்து கொண்டே இருக்கும்.
அதை அடக்குவது பணிவு மூலமே முடியும்.
அதனால்தான்,
அனுமன் எப்போதும்
ராமரின் திருவடியை பணிந்து இருக்கிறார்.
எண்ணங்கள்தான் அனைத்திற்கும் காரணம்!
ஒரு செயல் உருவாவதற்கு முன்பு எண்ணம் உருவாகி
அதுவே வார்த்தைகளாக செயலாக உருமாறுகிறது!
எண்ணமே வினைகளுக்கு காரணம்!
எண்ணங்களை நீக்கி, இறைவனின் திருவடியைப்
பணிந்து பற்றி இந்த உலகத்தின் கடமைகளை
செய்யும் பொழுது பிறப்பறுக்கும் நம் பெருமான்
முக்தியை கொடுத்து தன்னுடன் இணைத்துக் கொள்கிறார்!
இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு அகல் விளக்கு!
அத்தனை விளக்குகளின் தீச்சுடரையும் ஒன்றாக
இணைத்தோம் என்றால் கொழுந்து விட்டு எரியும் தீயாக மாறும்!
அதை உணர்த்தும் வகையில் திருவண்ணாமலையில்
தீபம் ஏற்றப்படுகிறது!
அருகில் சென்று பார்த்தால் தீ கொழுந்து விட்டு எரியும்!
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு சிறிய அகல் விளக்கு தீபமாக தெரியும்!
இறைவன் ஒவ்வொரு உயிரின் உள்ளேயும்
அகல் விளக்கு தீபமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்!
இதனை உணர்வோம்! பிறாவாப் பெருநிலை பெறுவோம்!
சிவாய நம ஓம் சாய் ராம்
நமச்சிவாய வாஅழ்க
அணுவை விடவும் சிறிதாக, மிகவும் நுண்மையாக
அனைத்து பொருட்களிலும் இருக்கும்
சிவனை வணங்குகிறேன்.
நாதன் தாள் வாழ்க
தீயாய், ஜோதியாய் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க (2)
கண்ணிமைக்கும் நேரம் கூட நீங்காமல் ஆயுட்காலம்
முழுவதும் அகத்தில் நீங்காமல்
நிறைந்திருக்கும் இறைவன் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க (3)
சிவனின் வாகனமாக இருக்கும் நந்தி தேவரின்
குருவான சிவனின் தாள் வாழ்க
(முதல் குருவான நந்தி தேவரின் குருவான குரு என்பதால்
சிவன் குருமணி ஆகிறார். ( குருமணி - குருவிற்கே குரு)
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 4
நம் அகத்திலேயே குடியிருப்பதினால் நமக்கு மிக
அருகிலேயே இருக்கும் இறைவன் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோனாக
இருப்பதால் ஏகன்! இவ்வுலகிலுள் அனைத்து
உயிர்களின் ஆன்மாக்களில் அவன் நிறைந்திருப்பதால்
அநேகன் ஆகவும் இருக்கும் இறைவன் தாள் வாழ்க!
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 6
எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் தறிகெட்டு
காற்றை விட வேகமாக ஓடும் மனதின் வேகத்தை அழித்து
ஆட்கொள்ளும் இறைவன் தாள் வாழ்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 7
பிறவித் தளையை அறுத்து, அழித்து தன்னுடன்
சேர்த்து கொள்பவனான சிவன் தாள் வாழ்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 8
தனக்குள் இருக்கும் இறைவனை உணராமல் வெளியே
எங்கெங்கேயோ தேடுபவர்களுக்கு தூரமாய்
இருக்கும் இறைவன் தாள் வாழ்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 9
மாயை என்னும் சுவர் அழித்து தனக்குள்ளேயே
இறைவன் இருக்கிறான் என்பதை அடியவர்கள்
உணரும் பொழுது பேரின்பம் தரும் இறைவன் தாள் வாழ்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
தானும் இறைவனும் வேறு வேறு என்கிற
இருமைச் சுவரை அழித்து தன்னுள்ளேயே
இறைவனை உணர்பவர்களை உயர்த்தும் இறைவன் தாள் வாழ்க!
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 11
உலகத்தின் மூத்தவனான இறைவன் அடி போற்றி!
உலகத்தின் தந்தையான இறைவனடி போற்றி!
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 12
அகத்தினுள் தீயாக இருக்கும் இறைவனடி போற்றி!
தீயாக இருப்பவனின் சிவந்த திருவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 13
குற்றமற்றவனும் பரிசுத்தமானவனும்
அன்பே உருவானவனுமான இறைவனடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 14
மாயையான பிறப்பை அழிக்கும் இறைவனடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
பிறவி என்னும் பெருங்கடலில் நம்மை பாதுகாத்து
உய்வித்து நமக்கு முக்தி அளிக்கும் இறைவனடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி 16
அகத்தில் ஒளியாக இருப்பவனை உணரும் பொழுது எல்லையில்லாத,
திகட்டாத, பேரின்பமான முக்தியை அளிப்பவன்
என்பதை உணர்த்தும் வண்ணம் திருவண்ணாமலையில்
தீபமாக ஒளிரும் இறைவன் போற்றி!
( திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்று சொல்வது இதனால்தான்)
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 17
சிவன் என் அகத்தினுள் எப்பொழுதும் இருப்பதினால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் 18
அவன் இயற்றச் சொன்னதினால் அவன் திருவடி வணங்கி
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை 19
என் உள்ளத்தில் இருக்கும் சிவன் மகிழ அவன் பெருமைகளை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான். 20
என்னுடைய முந்தைய பிறவிகளின் வினை அழியச் சொன்னேன்
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி 21
நெற்றிக் கண்ணுடையவன் என் மீது கருணை கொண்டு என்னிடம் வந்தான்
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி 22
கற்பனை செய்ய இயலாத அரிய அழகு, மரவுரி அணிந்த கால்கள்
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய், 23
விண்ணுலகம் மண்ணுலகம் மற்றும் எல்லா இடங்களிலும் நிறைந்த ஒளியாய்
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் 24
மனதாலும் எட்ட இயலாத எல்லையில்லாத அவன் சிறப்பை
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்25
வினைகளால் சூழப்பட்டதால் ஒப்பில்லாதவனை
புகழும் வழி அறியாது தவிக்கின்றேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 26
புல்லாக பூண்டாக புழுவாக மரமாக
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 27
பலவகை மிருகமாக பறவையாக பாம்பாக
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 28
கல், மனிதர் பேய் இதுபோன்ற கூட்டங்களாக
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 29
வலிய அசுரராய் முனிவர்களாக தேவர்களாக
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
பயனற்ற அசையும் அசையா பொருட்களாக
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 31
அனைத்து பிறவியும் எடுத்து களைத்தேன் எம்பெருமானே
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 32
உண்மைப் பொருளே திருவடிகள் கண்டு
என்னுடைய வினைகள் நீங்கப் பெற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 33
என் உள்ளத்தில் இருந்தவனை உணர்ந்ததினால்
உய்ந்தேன் (பிறவிப்பிணியில் இருந்து பிழைத்தேன்)
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் 34
உண்மைப்பொருளானவன், குற்றமற்றவன்,
பசுக்களான உயிர்களின் தலைவன்! வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
ஐயா என்று அழைக்கும் பேறு பெற்றவனே!
நுண்மையாய் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பவனே
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா 36
மலை மேல் ஒளியாய் இருப்பது போல்
அகத்திலும் இருக்கும் இறைவனே
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 37
மாயையான எண்ணங்கள் மறைந்து போகும்போது தோன்றுபவனே,
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 38
உண்மையான ஞானம் கிடைக்கும் பொழுது ஒளியாக பிரகாசிப்பவனே,
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 39
உண்மையான ஞானம் இல்லாதபொழுது இருளாக இருப்பவனே,
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஞானம் பெறும் பொழுது அகத்தில் ஒளியாய் தோன்றுபவனே!
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் 41
எல்லையற்றவனே, பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவனே,
அனைத்து உலகங்களும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 42
உருவாக்குபவனே, பாதுகாப்பவனே, அழிப்பவனே,
மாயை என்னும் மறைத்தலை நீக்கி அருளுபவனே
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 43
அடைக்கலம் தந்து என்னை உனக்கு சேவை செய்ய வைத்தவனே,
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே 44
என் அகத்தினுள் மறைந்து இருந்த நீ வெளிப்பட என்னுள்ளேயே
என் பக்கத்திலேயே இருப்பவன் நீ என்று உணர்ந்தேனே!
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
எண்ணங்கள் மறைய வெளிவந்தவனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 46
கறந்த பாலிலேயே நெய் மறைந்திருப்பது போல்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 47
தன்னையே திரும்ப திரும்ப நினைப்பவன் உள்ளத்தில் கசிந்து
வெளிப்பட்டு (இனியும் மறைந்திருக்க முடியாமல்)
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 48
அந்த அடியவர்களின் பிறவித் தளையை அறுக்கும் நம்பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த 49
பஞ்ச பூதமாய் இருக்கிறான்! ஆனாலும் தேவர்களுக்கு
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
அவன் மறைந்து இருக்கிறான்; எண்ணற்ற எண்ணங்களுக்கு அடியில்
மறைந்திட மூடிய மாய இருளை 51
மறைந்து இருப்பவன், எண்ணங்கள் என்னும் மாய இருள் மறைத்து இருக்கிறது
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி 52
எண்ணங்கள் என்கிற கடினமான நங்கூர கம்பி வடம் கொண்டு பிணைத்திருக்கிறது
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, 53
அது வெளியே தெரியாவண்ணம் தோலினால் மூடப்பட்டு, கிருமி, அழுக்கு,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 54
ஆணவம், வஞ்சனை எல்லாம் சேர்ந்த ஒன்பது வாயில் கொண்ட உடம்பு
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
ஐந்து புலன்களாலும் குழம்பி நம்மை ஏமாற்றுகிறது
விலங்கு மனத்தால், விமலா உனக்கு 56
எண்ணற்ற எண்ணங்களால் சூழப்பட்டிருக்கும் நான், தூயவன் ஆன உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் 57
எண்ணங்களை நீக்கி அன்பால் உன்னை நினைக்க
அகத்தினுள் மறைந்திருக்கும் நீ வெளிப்படுவாய்!
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி 58
உய்வு இல்லாத இழிந்தவனான எனக்கு
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி 59
என் மீது கருணை காட்டி, மனித உருவில்
வந்து பொற்பாதங்களை காட்டிய இறைவனே!
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
இழிந்தவனுக்கு இழிந்தவனாய் இருந்த இந்த அடிமை மேல்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே 61
தாயை விடவும் உயர்ந்த அன்பு செலுத்தும் ஈசனே!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 62
எண்ணங்கள் அற்ற உள்ளத்தில் தோன்றிய தீச்சுடரே!
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே 63
ஒளிமயமானவனே, தேனே, அரிய அமுதே, சிவந்த மேனியனே!
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 64
பிறவித் தளையை அறுத்து ஆன்மா மோட்சம் அடைந்து அவனைச் சேரும்
சந்தோஷத்தில் நடுஇரவில் கழைக்கூத்தாடுபவனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
எண்ணங்கள் மறைந்து அவன் அருளைப் பெறும் தகுதி பெறும்பொழுது
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே 66
பிறவிப் பெருங்கடலில் ஆன்மாக்களை
மீட்டெடுத்து அருள் புரிய காத்திருப்பவனே!
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே 67
திகட்டாத அமுதமே, எல்லையற்றவனே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 68
தெளிவில்லா மனதில் ஒளியாக ஒளிந்து இருப்பவனே!
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 69
அணுவாய் குறுகி என் ஆன்மாவில் இருப்பவனே!
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
இன்பம், துன்பம், இறப்பு இல்லாத இறைவனே!
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் 71
தோழனுக்கு தோழனாய், அனைத்துமாய் , தாயாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே 72
ஜோதியாய் தோன்றியவனே, பிறப்பு என்று
எந்தக் கருப்பையிலும் தோன்றாதவனே!
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 73
எண்ணங்கள் என்னும் மாய இருள் நீங்க
மனதினுள் சூரியனாய் பிரகாசிப்பவனே!
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 74
உன் பக்கம் என்னை இழுத்துக் கொண்ட இறைவனே!
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
தன்னையே நினைத்து இருப்பவர் நுண்ணிய உணர்வில்
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே 76
உணர வேண்டும் என்கிற விழிப்புணர்வோடு இருந்தால்,
உணரக் கூடிய நுண்மையான உணர்வே!
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 77
இறப்பும், பிறப்பும், உருவமும் இல்லாத பேறு பெற்ற இறைவனே!
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 78
காப்பவனே!அகத்தில் ஒளியாய், எண்ணற்ற எண்ணங்களினால்
மறைக்கப்பட்டு இருப்பதால் காண்பதற்கு அரியவனே!
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 79
அமைதியான எண்ணமற்ற மனதில் ஞான வெள்ளமாய் எழுபவனே!
தந்தையாய், பெரியோனாய்
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மிக நுண்ணிய உணர்வாய் அகத்தில் உணரப்பட்டு
ஒளியாய் தோன்றி ஒளிர்பவனே!
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 81
மாறிக்கொண்டே இருக்கும் இந்த மண்ணுலகத்தில்
வேறு வேறு பிறப்பு எடுக்கும் ஆன்மா
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
எண்ணங்கள் மறைந்த மனதில் மெய்ப்பொருளாய் உண்மை ஞானமாய்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே 83
ஊற்றாய் கசிந்து வெளிப்படுபவனே அர்த்தநாரீஸ்வனே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப 84
இந்த ஊன உடம்பில் மறைந்திருக்கும் இறைவனை உணரும் பொழுது
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றுதலுக்குரியவனே! தந்தையே! நீ நெருப்பா! இல்லை! நீ சூரியனா!
இல்லை, இல்லை நீ பல சூரியன்!
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 86
என அகத்தில் ஒளியாய் இருக்கும் உண்மைப் பொருளை
உணரும் பொழுது மாய இருள் மறைய
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே 87
மற்றொரு பிறப்பைத் தடுக்க ஆன்மாவை மீட்டெடுப்பவனே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே 88
அறியாமையுடன் கூடிய ஐம்புலன்களை உடைய பிறவித் தளையை
அழிக்கக் கூடிய வலிமை உடையவனே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 89
கப்பலை திசை திருப்பும் கருவி போன்று
நம்மை திசைதிருப்பி (மடை மாற்றம்)
பிறவிக் கடலில் மூழ்காமல் வெற்றிபெற உதவும் இறைவனே!
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
தில்லையாகிய இதயத்தில் நடனமாடுபவன் என்பதை உணரும்
உயிர்களாகிய பசுக்களை தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்பவனே!
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 91
பிறவித் துன்பத்தை நீக்கி பிறப்பை தடுப்பவனே
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 92
காலத்தால் அழியாதவன், பார்ப்பதற்கு அரியவன்,
உலகத்தை ஆள்பவன் சிவன் என உறுதிபட சொல்லி
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 93
இந்தப் பாட்டில் உணர்த்தப்பட்டுள்ள ஒளியாய் இருப்பவனைஎண்ணங்களை நீக்கி உள்ஒளிருபவனை
உணர்ந்து இந்தப் பாடலை சொல்பவர்கள்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 94
சிவந்த மேனியனாக இருக்கும் இறைவனின் திருவடி அடைந்து,
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
எல்லோராலும் போற்றப்படுவர்!
Comments
Post a Comment