தான தர்மம் ஏன் செய்ய வேண்டும்?

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை


அன்று – இப்பொழுதல்லாமல் பிறகு (anytime but present, i.e., not now)
அறிவாம் – முடிவு செய்தல்
என்னா – “இப்ப என்ன அதுக்கு அவசரம்?” என்கிற தொனி
பொன்றுங்கால் – அழிதல்
பொன்றாத் துணை – அழியாமல் வரும் துணை


சிவாய நம குருவின் அருளால் உணர்ந்த விளக்கம்:
பிறருக்கு உதவி, தர்மம் போன்றவற்றை நினைத்த அந்த நொடியிலேயே செய்து விட வேண்டும்.
“பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று தள்ளி போடக்கூடாது.
ஏனெனில் உடலை விட்டு ஆன்மா எப்பொழுது நீங்கும் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.

 நம்மிடம் உள்ள மற்ற எல்லாம் நம்மை விட்டு நீங்கும் அல்லது அழிந்து விடும்.
ஆனால் நாம் செய்த தர்மம் நம்முடன் அழியாமல் துணையாக வரும் — என்பதுதான் பொருள்.


 தான தர்மம் ஏன்  செய்ய வேண்டும்?

நாம் இறந்த பிறகு, நம்ம உடலை விட்டு ஆன்மா வெளியேறியே ஆகணும்.
அப்போ அந்த ஆன்மா எங்கே போகும்? என்ன செய்யும்? — இதுதான் கேள்வி.

ஆன்மாவுக்கு பசியும் தாகமும் இருக்கு. ஆனா அதுக்கு சாப்பாடு எப்படி கிடைக்கும்? எங்கே ஓய்வெடுக்கப் போகும்?
இதுக்காகத்தான் நாம இப்போ இருக்கும் போதே தானம் செய்யணும், பிறருக்கு உதவணும்,
நல்ல வார்த்தை சொல்லணும், நல்ல செயல் செய்யணும்.

நம்ம வாழ்க்கையில் நாம செய்த அந்த தானங்களும்,
பிறருக்கு சொல்லிய ஆறுதல் வார்த்தைகளும்,
பிறருக்காக உழைத்த உதவிகளும் —
அவைதான் ஆன்மாவுக்கு, அது போகும் வழியில் தேவையான எல்லா உதவியும் செய்யும்.

நாம் திரும்பவும் இந்த உலகில் பிறக்கும் வரை,
நம்ம ஆன்மாவுக்கு துணையாக வரப்போவது இதுதான் —
நாம் செய்த தான தர்மங்களும் நல்ல உதவிகளும் மட்டுமே.

அதே நேரத்தில், முன்னோர்கள் தானம் செய்யாம விட்டிருந்தா,
அவர்கள் ஆன்மா சில நேரங்களில் கஷ்டப்படும்.
அப்போ பூமியிலிருக்குற அவர்கள் சந்ததிகள் — அதாவது நாம —
பிறருக்கு தானம் தர்மம் செய்தா, முன்னோர்கள் ஆன்மாக்களுக்கு அது உதவியாக இருக்கும்.

நாம் வங்கியில வச்சிருக்கும் பணம்,
நம்ம உடலோட இருப்பது வரைக்கும் தான் உதவும்.
ஆனா நாம செய்த தானம், தர்மம், உதவி
அது நம்ம உடலை விட்டு போன பிறகும்,
நம்ம ஆன்மாவுக்கே பாதுகாப்பு மாதிரி துணையாக இருக்கும்.

அது மட்டும் இல்லாமல்,
நாம் வாழும் இப்ப வாழ்க்கையிலே கூட
நம்ம கர்மாவினால் வரப்போகும் பெரிய ஆபத்துகளை குறைக்கவும்
இந்த தான தர்மங்கள் உதவும்.

ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம் —
ஒரு அப்பா தன் மகளோட கல்யாணத்துக்காக பணம் சேமிச்சு வைக்கிறார்.
திடீர்னு அவருக்கோ, அவரோட மனைவிக்கோ உடல்நிலை சரியில்லாம போச்சுனா,
அந்த சேமித்த பணத்தையே பயன்படுத்துவார் இல்லையா?
அதை கல்யாணத்துக்காக வச்சது — இதை எடுக்கக் கூடாது —ன்னு சொல்லி உட்கார மாட்டாரே!
முதல்ல உயிர் காப்பாத்துவார், பிறகு திரும்ப பணம் சேர்ப்பார்.

அதுபோலதான்,
இந்த வாழ்க்கையில யாராவது உதவி கேட்டா,
அந்த நேரத்துல எந்த யோசனையும் இல்லாம மனத்தோட உதவிட்டோம்ன்னா,
அந்த உதவி நமக்கே இந்த பிறவியில் ஏற்படும்
மிகப் பெரிய துன்பங்களை குறைக்கும் அற்புதமான கவசம் ஆகி விடும்.

அதனால தான்,
இந்தப் பிறவியில நாம எந்த பலனையும் எதிர்பார்க்காமல்,
ஆன்மாவிற்காகவும், வாழ்க்கைக்காகவும்
எப்பொழுதும் இயல்பாக  நம்ம சக்திக்கு ஏற்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவு  தர்மம் செய்யனும், பிறருக்கு சொல்லாலே ஆறுதலா இருக்கலாம், பிறருக்காக பிரார்த்தனை பண்ணலாம்

அதோட,
எப்போ முடியுமோ அப்போ மனம் ஒன்றி இறைவனை நினைக்கணும்,
அவரோட நாமத்தை சொல்லணும்,
அவரோட பெருமைகளை பிறருக்கு எடுத்துச் சொல்லணும்,
முடிந்த அளவுக்கு பாராயணம், ஜெபம் எல்லாம் ஆத்மார்த்தமா செய்யணும்.

இவை எல்லாமே நம்ம இப்பிறவி வாழ்க்கைக்கும்,
ஆன்மாவின் பயணத்துக்கும்
உண்மையான வழிகாட்டி, துணை, பாதுகாப்பு.


கண்டிப்பாக தற்கொலை செய்யக் கூடாது! ஏன் என்பதை இங்கு பார்ப்போம்?

ஒரு எடுத்துக்காட்டை கொண்டு இதனைப் பார்ப்போம் —


நம்ம வீட்டில கோபம் வந்துட்டு “போதும்! இனிமே வீட்டுல இருக்க மாட்டேன்”ன்னு சொல்லிட்டு,
வீட்டை விட்டு வெளியேறிட்டோம் என்று நினைச்சுக்கோங்க.

அப்புறம் என்ன ஆகும்?
எங்கே போவது? எங்கே தங்குவது? எங்கே சாப்பிடுவது? எங்கே தூங்குவது? —
இப்படி எல்லாம் யோசிச்சா தான் புரியும்,
“வீடு” என்ற ஒரு பாதுகாப்பு எவ்வளவு பெரிய வரம் என்று.

திடீர்னு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிட்டீங்கன்னா,
சாப்பாடு, தூக்கம், தங்கும் இடம் — எல்லாவற்றுக்கும் மேலா ஒரு பாதுகாப்பு என்ற உணர்வு கிடையாது.
வீட்டை விட்டு வெளியேறும்போது கைல பணம் இருந்தாலும் கூட
நமக்கு பாதுகாப்பு கிடைக்குமா? — இது பெரிய கேள்விக்குறி தான்.

அதுபோலவே,
வாழ்க்கை வெறுத்து தற்கொலை பண்ணிக்கிறவர்கள்,
அந்த பாதுகாப்பையே இழந்துவிடுறாங்க.

தற்கொலை செய்த உயிரின் ஆன்மா போக இடமில்லாமல்,
மிகவும் துயரத்துல தவிக்கும்!
இயற்கையால் நேர வேண்டிய ஒரு விஷயத்தை தானே முன்னாடி செய்து கொள்றதால,
அந்த ஆன்மா பலவிதமான துன்பங்களை அனுபவிக்க வேண்டி வரும்.

வீட்டை விட்டு ஓடிச் சென்றவர்கள் எப்படி வெளியில் திண்டாடி,
துயரத்துல வாழ்க்கையைச் சமாளிக்கிறாங்களோ,
அதை விட பல மடங்கு வேதனை ஆன்மாவுக்குத் தற்கொலைக்குப் பிறகு இருக்கும்.

அதை நிச்சயமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்கணும்.
“தோல்வி வந்தா அதை எதிர் நோக்கணும், சாக நினைக்கக் கூடாது”ன்னு சொல்லிச் சொல்லி மனசுல பதிக்கணும்.

மேலே சொன்ன வீட்டை விட்டு வெளியேறும் எடுத்துக்காட்டை வைத்து,
 குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரியும் மாதிரி விளக்கணும் —
தற்கொலை பண்ணிட்டா ஆன்மா எவ்வளவு துயரப்படும்னு புரியும்படி சொல்லணும்.

அப்படி சொன்னா தான், இளையவர்கள் எந்த பிரச்சினையையும் மனத்திடத்தோட எதிர்கொண்டு,
தங்களோட வாழ்க்கையை தாங்களே முடிச்சுக்கொள்ளாத அளவுக்கு
வலிமையான மனசு வளர்த்துக்கொள்ளுவாங்க.

மேலே இருக்கும் திருக்குறள் அறத்துப்பாலில் வரும் ஒரு குறள்!

திருக்குறளில் இரண்டு மூன்று இடங்களில் ஆன்மா கஷ்டப்படும் என்பதை தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது!
ஆனால் அதனை உணர்ந்திருக்கிறோமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி!

ஆன்மா குறித்த விஷயங்களை முதலில் நாம் புரிந்து கொண்டு
குழந்தைகளுக்கும் அது குறித்து சொல்லிக் கொடுக்கும் பொழுது
கண்டிப்பாக குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்!

இந்தப் பிறவி வாழ்க்கை வாழும் பொழுது ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால்
அம்மா, அப்பா, சகோதரர், சகோதரி அல்லது உறவினர்கள்,
ஏன் முகம் தெரியாதவர்கள் கூட உதவலாம்.
நாம் பிரார்த்தனை செய்யும் பொழுது இறைவனும் உதவுவார்.

ஆனால் உடலை விட்டு ஆன்மா நீங்கிய பிறகு,
செய்த தான தர்மங்கள் மற்றும் இறைவனை நினைத்து செய்த பாராயணங்கள், நாம ஜெபம்
இவற்றைத் தவிர வேறு எதுவும் உதவ முடியாது!

இறைவனை நினைத்து பிரார்த்தனை கூட ஆன்மாவால் செய்ய இயலாது!
அவ்வாறு செய்வதற்கு நாம் மனித பிறவி எடுத்திருந்தால் மட்டுமே முடியும்!

இதனை நன்கு புரிந்தவர்கள் தான தர்மம் செய்ய யோசிக்க மாட்டார்கள்!!


Comments

Popular posts from this blog

சீரடி சாய்நாதர் அருளால் உணர்த்தப்பட்ட எளிய சிவபுராண விளக்கம்!

🕉️ இறைவனை ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவும் ஒரு இறை அனுபவப் பதிவு 🕉️

🕉️ சிவபுராணத்தின் வாழ்க, வெல்க, போற்றி குறித்து குரு அருளால் எளிய விளக்கம்!