குருவின் அருளினால் — கந்த குரு கவசத்தின் எளிமையான விளக்கம் 2
பாடல் வரிகள்:
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறள் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முகா சரணம் சரணம்
ஸ்கந்தகுரோ காத்திடுவாய் காத்திடுவாய்
ஸ்கந்தகுரு நாதா போற்றிடுவேன் போற்றிடுவேன்
புவனகுரு நாதா போற்றி போற்றி
ஸ்கந்தா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி,
அறுமுகா போற்றி; அருட்பதம் அருள்வாய்
தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்.
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய்
ப்ரணவமதை அகக்கண் திறக்க அருள்வாய்
உபதேசம் திக்கெலாம் வென்று
திருச்செந்தில் அமர்ந்தோனே ஆறுமுக ஸ்வாமி
யுன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்.
“அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே”
இது குருவை “அன்பின் உருவம்” என்று போற்றி ஆரம்பிக்கிறது.
இன்று உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான அடியவர்கள் எத்தனையோ மகான்களை குருவாக வணங்குகின்றனர்.
ஆனால் அவரை அன்பின் உருவமாக உணர்பவர்கள்தான்
பிறவா பெருநிலையை (மோட்ச நிலையை) அடையும் தகுதியை பெற்றவர்கள்.
ஏனெனில் குரு — வெறும் ஆசிரியர் அல்ல,
அன்பு என்ற ஜோதி வடிவில் நம்முள் விழிப்புணர்வைத் தருபவர். ஒருவரின் மாயை என்னும் இருளைப் போக்குபவர்!
🔹 “ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காணஅகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்.”
இறைவன் இந்த உலகின் எல்லா உயிர்களிலும் ஜோதி வடிவில் இருக்கிறார்,
ஆனால் அந்த ஒளி மாயை என்னும் இருள் பின்னால் மறைந்துள்ளது.
அதனால் நாம் இறைவன் நம் உள்ளத்தில் இருப்பதை உணர முடியவில்லை.
அந்த ஜோதி — அதாவது இறைவன் — நம்முள் இருப்பதை உணர்வதற்கான வழி,
குருவை அன்பின் வடிவாகப் பார்ப்பதுதான்.
பெரும்பாலானோர் குருவிடம் வாழ்க்கை வசதிகள், ஆரோக்கியம், துன்ப நிவாரணம் போன்றவற்றை வேண்டுகிறோம்.
ஆனால் குருவை உண்மையாக அன்பின் உருவம் என்று உணர்பவர்கள் —
அவர் நம் உள்ளேயே இருக்கிறார், ஒவ்வொரு கணமும் வழி காட்டுகிறார் என்பதை உணர்வார்கள்.
அப்படிப் புரிந்தவர்கள் ஒவ்வொரு செயலையும் குருவுக்காகவே அர்ப்பணிப்பார்கள்.
சாப்பிடும் பொழுது, தண்ணீர் குடிக்கும்பொழுதும் கூட,
“இது குருவிற்கு அன்பு சமர்ப்பணம்” என்ற மனநிலையில் செய்கிறார்கள்.
இது தான் மானசீக பூஜை — மனத்தால் செய்யப்படும் வழிபாடு.
திருவண்ணாமலை சென்றால் அல்லது நினைத்தால் முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அது பொய்யல்ல, ஆனால் நாம் புரிந்து கொள்ளும் விதம் தவறு.
தமிழ் அகராதியில் “நினைத்தல்” என்றால் “அறிதல்”.
அதாவது, திருவண்ணாமலை நினைத்தால் முக்தி என்றதன் உண்மை —
உள்ளத்தில் இருக்கும் அந்த ஜோதி வடிவிலான இறைவனை அறிந்தால் முக்தி கிடைக்கும் என்பதே.
அந்த “அறிதல்” என்பது குருவின் அருளால் தான் சாத்தியம்.
அந்தப் பக்குவ நிலைக்கு (mature spiritual state) முதலில் குருவை அன்பின் உருவமாக நம் உள்ளத்தில் உணர வேண்டும்.
அவர் நம்மை விட்டு ஒரு நொடியும் நீங்குவதில்லை —
அவர் எப்போதும் நம் இதயத்தில் இருக்கிறார் என்பதை மனம் தெளிவாக உணர வேண்டும்.
அந்த உணர்வுடன் வாழும் ஒருவர்,
எண்ணம் எண்ணங்கள், சொல்லும் சொற்கள், செய்யும் செயல்கள், பருகும் தண்ணீர், உண்ணும் உணவு —
எதையும் தனக்காக அல்ல, குருவுக்கே அர்ப்பணமாக நினைத்து செய்கிறார்.
இவ்வாறு வாழும் போது,
அவருக்கு நன்மை – தீமை என்ற இரண்டின் பிணைப்பு இல்லை.
அவர் எந்தச் செயலும் தனக்காகச் செய்வதில்லை என்பதால்,
முன்வினை (past karma) அவரை அண்டாது.
அவரது தற்போதைய செயல் கூட கர்மப் பிணைப்பில் சேராது.
ஏனெனில் எல்லா செயலும் குருவுக்காக, குருவினாலேயே நடக்கிறது.
இந்த சூட்சுமமான உண்மையைப் புரிந்து கொள்வோர் உண்மையில் பாக்கியசாலிகள்.
அவர்களே பிறவா பெருநிலை — அதாவது மோட்ச நிலை — அடைவதற்குரிய தகுதியுடையவர்கள்.
அந்த உயர்ந்த நிலைக்கு குருவே வழிகாட்டி.
அவர் அன்பின் வழியாக ஞானத்தின் ஒளிக்கு அழைத்துச் செல்கிறார்.
அந்த நிலையைக் கிடைக்கச் செய்யும் ஒரு சிறந்த வழி —
கந்த குரு கவசம் பாராயணம்.
அதை மனமாரப் படிக்கும் ஒருவர்,
குருவின் அருளால் அந்த பரம ஆனந்த நிலையை நிச்சயமாக அனுபவிப்பார்!
குரு அருளால் தொடரும்
Comments
Post a Comment